Archives: டிசம்பர் 2022

தாழ குனிதல்

தனது சிறிய மிதிவண்டியை, தனது சிறிய கால்களால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு வேகமாய் மிதித்து, ஓட்டிக்கொண்டிருந்த தன்னுடைய மகளை அந்த இளம் தாய் பின்தொடர்ந்தாள். ஆனால் அவள் நினைத்த வேகத்தை விட அதிக வேகமெடுக்கவே, கட்டுப்பாடின்றி மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்த சிறுமி, தனது கணுக்காலில் காயம் பட்டதென்று அழுதாள். அவள் தாயோ அமைதியாய் அவளருகே மண்டியிட்டு, தாழக் குனிந்து, கணுக்காலில் முத்தமிட்டாள் (வலி சரியாகிவிடுமாம்!). ஆச்சரியம்! அந்த சிறுமி குதித்தெழுந்து, மிதிவண்டியில் ஏறி மீண்டும் ஓட்ட ஆரம்பித்தாள். நமது வலிகளும்கூட இப்படி இலகுவாய் மாறினால் எவ்வளவு நலமாயிருக்கும்!

அப்போஸ்தலன் பவுல் தனது தொடர்ச்சியான உபத்திரவங்களின் மத்தியில் தேவனுடைய ஆறுதலை அனுபவித்ததால், அவரால் தொடர்ந்து முன்னேற முடிந்தது. 2 கொரிந்தியர் 11:23–29 இல், அவர் சந்தித்த உபத்திரவங்களில் சிலவற்றைப் பட்டியலிடுகிறார்: அடிகள், கசையடிகள், கல்லெறியப்படுதல், தூக்கமின்மை, பட்டினி, சபைகளைக் குறித்த கவலை. அவர் தேவன், "இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறார்" (1:3) என்பதை மிகநெருக்கமாக அறிந்துகொண்டார்.  இதையே மற்றுமொரு மொழிபெயர்ப்பு, "தேவன், மென்மையான அன்பைத் தரும் தகப்பன்' என்கிறது. அந்த தாய் தன் குழந்தையை தேற்றியதுபோல; தேவனும் நமது வேதனையின் மத்தியில் தாமே கீழே குனிந்து மென்மையாய் நம்மைப் பராமரிக்கிறார்.

தேவன் அன்பாய் தேற்றுகிற வழிமுறைகள் பலவாயும், வித்தியாசமானதுமாய் உள்ளன. நாம் தொடர்ந்து முன்னேற தமது வசனத்தின்மூலம் நம்மை ஊக்குவிப்பார் . நண்பர்கள் மூலமோ, யாராகிலும் மூலமோ நம்மோடு விசேஷித்தவிதமாக பேசி, நமது ஆவிக்கு ஆறுதலளிப்பார். நமது உபத்திரவங்கள் ஓயாததுதான், ஆனால் தேவன் கீழே குனிந்து நமக்கு உதவுவதால், நாம் மீண்டும் எழுந்து, ஓட துவங்கலாம்.

பொக்கிஷமான ஜெபம்

கிளார்க் மரங்கொத்தி ஒரு வியப்பான பறவையினம். ஒவ்வொரு ஆண்டும் தன்னை குளிர்காலத்திற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக நான்கைந்து வெள்ளை பட்டை பைன் விதைகளைச் சேகரிக்கும் இப்பறவை, ஒரு மணிநேரத்தில் சுமார் ஐந்நூறு விதைகளை ஒளித்துவைக்கிறது. பிறகு சிலமாதங்கள் கழித்து, கடும்பனியின் மத்தியிலும் இவ்விதைகளைத் தேடி வருகிறது. ஒரு கிளார்க் மரங்கொத்திப் பறவை, விதைகளை ஒளித்து வைத்திருக்கும் சுமார் பத்தாயிரம் இடங்களைக் கூட அறிந்திருக்கும். இது மிகவும் ஆச்சரியமானது (மனிதர்களாகிய நாம் நமது மூக்குக் கண்ணாடிகளையும், வண்டி சாவிகளையும் வைத்த இடம் தெரியாமல் திணறுவதை நினைத்தால் இது எவ்வளவு விசேஷித்தது).

இந்த வியத்தகு ஞாபக சக்தியும்கூட நமது ஜெபங்களை ஞாபகத்தில் வைத்திருக்கும் தேவனோடு ஒப்பிடுகையில், ஒன்றுமேயில்லை. ஒவ்வொரு உண்மையான ஜெபத்தையும் அவர் நினைவில் வைத்து, வருடங்கள் உருண்டோடினாலும் தவறாது அவைகளுக்குப் பதிலளிக்க வல்லவர். வெளிப்படுத்தின விசேஷத்தில் அப்போஸ்தலன் யோவான், பரலோகத்தில் தேவனை நான்கு ஜீவன்களும் இருபத்துநான்கு மூப்பர்களும் தொழுதுகொள்வதை விவரிக்கிறார். அவர்கள் ஒவ்வொருவரும், "பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும்" (5:8) பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

பண்டைய காலத்தில் தூபவர்க்கங்கள் விலையேறப்பெற்றவை. அவ்வாறே தேவனுக்கு நமது ஜெபங்களும் விலையேறப்பெற்றவை. ஆகவேதான் தேவன் அவைகளை தமக்குமுன் நித்தமும் பொற்கலசங்களில் வைத்துப் பாதுகாக்கிறார். தேவனுக்கு நமது ஜெபங்கள் முக்கியம், ஏனெனில் நாம் அவருக்கு முக்கியம். மேலும் நம்மைப்போலத் தகுதியற்றவர்களுக்குத் தேவன் இயேசுவின் மூலமாகப் பாராட்டும் இரக்கத்தால், அவரோடு தடையில்லா ஐக்கியத்தை அளிக்கிறார் (எபிரேயர் 4:14–16). ஆகவே தைரியமாக ஜெபியுங்கள், தேவனின் வியத்தகு அன்பின் காரணத்தால் உங்கள் ஒரு வார்த்தையும்கூட மறக்கப்படுவதுமில்லை, தவறவிடப்படுவதுமில்லை.

இணைக்கும் ஈட்டிகள்

இராணுவத்தில் ஒரு வீரர் எதிரிகளல்லாத தனது சொந்த படைகளால் எதிர்பாராதவிதமாகத் தாக்கப்படுவதை "நண்பர்களின் தாக்குதல்" என்றழைப்பர். ராணுவத்தில் இது எதிர்பாராதவிதமாக நடக்கலாம், ஆனால் நமது சொந்த வாழ்வில் சிலசமயம் "நண்பர்களின் தாக்குதல்கள்" திட்டமிட்டே நிகழ்கின்றன. மற்ற கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் நம்மைக்குறித்து கடினமான, பொய்யான காரியங்களைக் கூறுகையில்; நம்முடைய இருதயம் ஈட்டிகளாலும், அம்புகளாலும் பிளக்கப்பட்டதைப்போல உணருகிறோம்.

இப்போது இதைக் கற்பனை செய்துபாருங்கள். நீங்கள் இயேசுவின் கரங்களில் இருக்கிறீர்கள், ஒரு தகப்பன் தன் பிள்ளையைச் சுமப்பதுபோல அவர் உங்களை ஏந்தி, தமது இருதயத்தினருகே உங்களை வைத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இருக்கும் உங்கள்மீது யாராயினும் அம்பு எய்யவோ அல்லது ஈட்டியால் துளைக்கவோ முயன்றால் (வேதாகம நாட்களில் நடப்பதுபோல) உங்கள் இதயத்தில் பாயும் அம்புகளும் ஈட்டிகளும், அவருடைய இதயத்திலும் பாயுமல்லவா? அந்த அநீதியாலும் வேதனையாலும், உங்கள் இதயத்தைத் துளைத்த ஈட்டிகளையும், அம்புகளையும் பிடுங்கியெடுத்து, எதிர்த்தாக்குதல் நடத்த நீங்கள் விழையலாம். ஆனால் அதை நீங்கள் செய்ய மறுக்கையில், உங்கள் இதயத்தையும் இயேசுவின் இதயத்தையும் துளைத்த அதே அம்போ, ஈட்டியோ உங்கள் இதயத்தை அவரோடே இணைக்கிறது. உங்கள் பிணைப்பு ஆழமாகிறது.

எனவே அடுத்தமுறை உங்களை யாராவது தவறாக, இழிவாக அல்லது அவதூறாகப் பேசினால், அதற்காகத் தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். ஏனெனில் இயேசுவின் இருதயத்தோடு நீங்கள் நெருங்கும் வாய்ப்பு அது. மேலும் உங்களைக் காயப்படுத்தி வேதனைப்படுத்துபவருக்காக ஜெபியுங்கள்.

விசுவாசத்தால் உறுதியாய் நிலைத்தல்

1998 ஆம் ஆண்டு உலகிலேயே அதிகம் விற்பனையாகும் அலைபேசி உற்பத்தி நிறுவனமாக நோக்கியா உயர்ந்து, 1999 ஆம் ஆண்டு சுமார் நான்கு பில்லியன் டாலர்கள் லாபத்தை ஈட்டியது.  ஆனால் 2011 ஆம் ஆண்டு அதின் விற்பனை தோய்ந்து, தோல்வியின் விளிம்பை நோக்கிப் போய்க்கொண்டிருந்த இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. நோக்கியா அலைபேசி பிரிவின் தோல்விக்கு முக்கிய காரணி, சந்தை நிலவரத்தைக் கண்டு பயந்ததால் எடுக்கப்பட்ட மோசமான தீர்மானங்கள். அதின் மேலாளர்கள் தங்கள் வேலை பறிபோகுமோவென்று, நோக்கியா அலைபேசியிலிருந்த மென்பொருள் மற்றும் வடிவமைப்பு குறைபாடுகளைக் குறித்துப் பேச தயங்கினர்.

யூத ராஜாவான ஆகாஸின் இருதயமும் அவன் ஜனத்தின் இருதயமும் பயத்தினால் காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறதுபோல் அசைந்தது (ஏசாயா 7:2). இஸ்ரவேலின் ராஜாவும், சீரியாவின் ராஜாவும் ஒரே அணியாகப் படைகளை ஒன்றுதிரட்டி, யூதாவின்மேல் யுத்தம் பண்ண வந்தார்கள் (வ.5–6). தேவன் ஏசாயாவைக்கொண்டு ஆகாஸின் எதிரிகளின் ஆலோசனை நிலைநிற்பதில்லை, அதின்படி சம்பவிப்பதுமில்லை (வ.7) என்று அவனை ஊக்கப்படுத்தினபோதும், மதியிழந்த தலைவன் பயத்தின் காரணமாக அசீரியா ராஜாவோடு கூட்டணி வைத்து, அந்த பராக்கிரமமான ராஜாவுக்குக் கீழ்ப்படுகிறான் (2 இராஜாக்கள் 16:7–8). நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் (ஏசாயா 7:9) என்று தனக்குச் சொன்ன தேவனை அவன் நம்பவில்லை.

இன்றைக்கும் விசுவாசத்தால் உறுதியாய் நிற்பதென்பதை புரிந்துகொள்ள, எபிரெய ஆக்கியோன், "நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே"' (10:23) என்பதைக் கருத்தில் வைக்க நம்மை அறிவுறுத்துகிறார். நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற (வ.39) இயேசுவில் நம்பிக்கைவைக்க, பரிசுத்த ஆவியானவர் நம்மை பெலப்படுத்துவார்.